தமிழ்நாடு செய்திகள்

ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம்- தமிழக அரசு ஆலோசனை

Published On 2025-04-02 11:51 IST   |   Update On 2025-04-02 11:51:00 IST
  • தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வசூலித்து வருகிறது.

குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. பின்னா் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்திய பிறகு மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தனது தோ்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி நடந்து முடிந்தவுடன் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதியளித்தாா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது. தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்ட பகுதிகளில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. அந்த வீடுகளுக்கு முதலில் பரீட்சார்த்தமான முறையில் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. எனவே வருகிற ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு வீடுகளுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News