கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு - தமிழக அரசு
- வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
- நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,
* கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
* வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
* நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.
* கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.
* அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
* நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.