தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

Published On 2026-01-06 08:14 IST   |   Update On 2026-01-06 08:14:00 IST
  • கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
  • சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

சென்னை:

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டு முதல்முறையாக கூடும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் உரையை கவர்னர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News