டிசம்பர் 9-ல் கூடுகிறது தமிழக சட்டசபை - சபாநாயகர் அறிவிப்பு
- சட்டமன்ற கூட்டத்தொடரை படிப்படியாக நேரடியாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- செயற்கை நுண்ணறிவில் தமிழ்நாடு உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் அதன் மீதான விவாதம் 4 நாள் நடைபெற்றது.
அதன்பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதம் உடனே நடைபெறாமல் பாராளுமன்ற தேர்தலுக்காக தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் 2024-25-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் கடந்த ஜூன் 20-ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது.
அப்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் அடங்கிய கூட்டம் ஜூலை 29-ந்தேதி வரை நடந்தது. வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூட்டத்தை வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன். சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்.
ஒரு வருடத்தில் சட்டசபை கூட்டம் மொத்தம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழுதான் கூடி முடிவு செய்யும். என் விருப்பத்துக்கு 100 நாள் நடத்த போகிறேன் என்று சொல்ல முடியாது.
அலுவல் ஆய்வு குழுவில் எல்லா கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவை உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் இருக்கிறது. சில உரிமை மீறல்கள் ஆய்வில் இருக்கிறது. அந்தந்த பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. தேவையான இடங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சட்டமன்ற கூட்டத்தொடரை படிப்படியாக நேரடியாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ள முதலமைச்சர் வந்த பிறகுதான் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவில் தமிழ்நாடு உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது. சட்டசபையில் காகித மில்லாத சட்டசபையாக புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுகிறோம். பள்ளிகள் வரை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நமது முதலமைச்சர் கொண்டு சேர்த்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பான சூழ்நிலையில் டிசம்பர் 9-ந்தேதி தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், மழை-வெள்ளம் சேதம், கூட்டணி விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும்.
2026 தேர்தலில் எந்த கூட்டணி ஜெயிக்கும் என்ற வகையில் அமைச்சர்களின் பேச்சுக்கள் இருக்கும். ஆளும் கட்சி-எதிர்க்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.