ஆணவக் கொலையா? காதலன் கொடுத்த புகார்- பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.
முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.