தமிழ்நாடு செய்திகள்

கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மணிகண்டன்

திருப்பூர் SSI சண்முகவேல் கொலை- கைது செய்யப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2025-08-07 08:01 IST   |   Update On 2025-08-07 11:52:00 IST
  • சண்முகவேல் கொலை வழக்கில் 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
  • தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் சிக்கனூத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன்கள் மணிகண்டன்(30), தங்கபாண்டி(25), ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல்(57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் தோட்டத்திற்கு விரைந்து சென்று, தந்தை-மகன்கள் இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க முயன்றனர்.

அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன்கள் 3 பேரும், எங்களிடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க நீங்கள் யார்? என்று கேட்டு சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே, போலீஸ்காரர் அழகுராஜா அங்கிருந்து தப்பியோடி விட்டார். சண்முகவேல் தப்பியோட முயன்றபோது அவரை சரமாரி அரிவாளால் வெட்டினர். கழுத்தில் வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் உயிரிழந்தார்.

இதையடுத்து தந்தை-மகன்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து அழகுராஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட கிடந்த சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோரை பிடிக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலையாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி தனிப்படையினர் வேடசந்தூர் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் உடுமலை, குடிமங்கலம் பகுதியிலும் வலைவீசி தேடினர்.

இந்தநிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் எங்கு பதுங்கி உள்ளான் என்று விசாரணை நடத்தினர். அப்போது உடுமலை பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படையினர் மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தியபோது குடிமங்கலம் சிக்கனூத்து உப்பாறு ஓடை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தான்.

இதைத்தொடர்ந்து ஆயுதத்தை பறிமுதல் செய்வதற்காக மணிகண்டனை, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் வேனில் உப்பாறு ஓடை பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

அங்கு சென்றதும் போலீசார் மணிகண்டனை வேனில் இருந்து இறக்கி, அரிவாளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்று அதனை மீட்க முயன்றனர். அப்போது அரிவாளை எடுத்த மணிகண்டன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமாரின் வலது கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றான்.

அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் வெட்ட முயன்றான். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தற்காப்புக்காக மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,கிரிஷ் யாதவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கிசூடு நடந்த உப்பாறு ஓடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Tags:    

Similar News