திருப்பதி திருக்குடை ஊர்வலம்- ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
- இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது.
- பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் அழகிய வெண்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது. பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.
விஷ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், மாநில செயலாளர் பாலமணிமாறன், மாநில துணைத்தலைவர் பத்ரி நாராயணன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ்குமார் சோப்ரா, வி.எச்.பி பொருளாளர் தணிகைவேல், தாமோதரன், பிரச்சார அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிவசபா ஆசிரமம் நிர்வாகி அன்னை ஞானேஸ்வரி கிரி.
திரைப்பட நடிகர் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் வி.ஜெ.ஜெகதீசன், மாநில அமைப்பாளர் ஆத்தூர் வெ.பாலாஜி, அமைப்பு செயலாளர் எஸ்.வி.ராமன், திரைப்பட நடிகர் எஸ்.ராஜா, வி.எச்.பி அறங்காவலர் ஜி.மணிகண்டன், திருச்சி சாரதாஸ் எம்.ரோஷன், திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த 21 அழகிய திருக்குடைகள் பொதுமக்கள் பக்தர்கள் வழிபாடுகளுடன் ஊர்வலமாக சென்று 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலிலும் மாலை 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படுவதாக திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.