தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை- 3 பேர் வெறிச்செயல்

Published On 2025-09-22 14:50 IST   |   Update On 2025-09-22 14:50:00 IST
  • காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
  • இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).

இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார்.

இன்று வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோப்பூர் விலக்கு அருகே அவரை மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்த நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மரக்கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருச்செந்தூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News