திருப்பரங்குன்றம் மலைமேல் இருப்பது தீபத்தூண் அல்ல - ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு வாதம்
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.