திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்- சென்னையில் குவிந்த தொண்டர்கள்
- திருமாவளவன் பிறந்தநாளை இன்று மாலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
- நாளை காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை தமிழர் எழுச்சி திருநாளாக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாளை அவருக்கு 63 வயது.
இதை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகிகள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் இணைந்து திருமாவளவன் பிறந்தநாளை இன்று மாலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் கவியரங்கம் வாழ்த்து அரங்கம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
வாழ்த்தரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் டிஜிபி வனிதா, திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்பி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில திருமாவளவன் எம்.பி. ஏற்புரை நிகழ்த்துகிறார். நள்ளிரவு 12 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.
தலைமை கழக நிர்வாகிகள் ஏ.சி பாவரசு, துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, பாவலன், தகடூர் தமிழ்ச்செல்வன், இளஞ் சேகுவாரா, பாலசிங்கம் ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்து உள்ளனர். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நாளை காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.