அதிமுகவை பாஜக என்னும் பாம்பு விழுங்குகிறது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விமர்சனம்
- அமித்ஷா வீடுதான் அதிமுகவிற்கு நீதிமன்றமாக இருக்கிறது.
- ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார்.
இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள். திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.
திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. நீங்கள் உங்கள் கட்சியை கவனியுங்கள். நீங்கள் தான் தவளை. பிஜேபி பாம்பு உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதி உள்ள போய்ட்டீங்க.
தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு.
அதிமுக தலைவர்கள் இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.
அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு.
கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம்" என்று தெரிவித்தார்.