விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.. இதில்கூட ஸ்டிக்கர் ஒட்ட, வெட்கமாக இல்லையா ரகுபதி சார்? ஆர்.பி. உதயகுமார்
- பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியவர் எடப்பாடியார்.
- விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று மார்தட்டும் கொத்தடிமை திரு. ரகுபதி அவர்களே, தமிழகத்தில் உள்ள அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை என்ன என்று தெரியாமல், நடவடிக்கை எடுக்காமல் ப(தூ)ங்கும் மந்திரிக்கு ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதே, என்ன இன்னும் நிலைய வித்துவானை காணவில்லை? என்று நினைப்பதற்குள் தனது அறிக்கை வாந்தி வாயிலாக மீண்டும் ஆஜராகிவிட்டார் ரகுபதி சார். ஸ்டாலின் மாடல் அரசு விசாரித்த லட்சணத்தை காரித் துப்பி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அப்படி நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட SIT நடத்திய விசாரணைக்குக் கூட Credit எடுக்கும் அளவிற்கு ஸ்டிக்கர் வெறி திமுக-விற்கு முற்றிப் போயுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர் சந்திப்பில், "இந்த வழக்கில் FIR பதிய வேண்டாம்" எனவும்; "Medical Test எடுக்க வேண்டாம்" எனவும் திமுக அரசின் காவல்துறை சொன்னதாகக் கூறியுள்ளார். இதுதான் நீங்கள் இந்த வழக்கை நடத்திய லட்சணம் ரகுபதி சார்! FIR பதியாமல், உங்கள் அனுதாபி ஞானசேகரனைக் காக்க முயன்றது இன்று அம்பலப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை சித்து வேலைகளைத் தான் இந்த வழக்கில் செய்தீர்கள் என்பதை விசாரிக்கவே இன்னொரு வழக்கு பதிந்தாக வேண்டும்!
"ஞானசேகரன் போன் Flight Mode-இல் இருந்தது" என்று அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுத்ததே இந்த வழக்கின் சந்தேகங்களை வலுப்பெறச் செய்தது. குற்றம் நடைபெற்றபோது, குற்றவாளி ஞானசேகரனை காவல் துறை Red Hand-ஆக பிடிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தவுடன் ஞானசேகரன் முதலில் விசாரணை செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகிறான். மறுநாள் மீண்டும் காவல் துறையால் கைது செய்யப்படுகிறான். குற்றம் நடந்தபோது அவன் பயன்படுத்திய போனும், அவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட போனும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு போன்கள் பயன்படுத்தப்பட்டதா? இடையில் சார் குறித்த தடயங்களை அவன் அழித்திருக்கமாட்டானா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்பது பெரிதல்ல. ஆனால், ஒரு History Sheeter வீட்டு பெட்ரூமில் அமர்ந்து திமுக அமைச்சர், சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்ததைத் தான் கேள்வியாகக் கேட்கிறோம். தனது வீட்டிலேயே உணவு அருந்துவதால் ஏற்படும் தைரியத்தில்தான் இவன் இதுபோன்ற குற்றங்களை தைரியமாக செய்துள்ளான். அதற்கான பதிலை சொல்லாமல் இன்றுவரை "அது வந்து இப்போ என்ன சொல்றது?" என மழுப்பி வருவது நீங்கள் தானே ரகுபதி சார்? மேலும், சட்டமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிய விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வளவு குற்றப் பின்னணி உள்ள இவனை திமுக அனுதாபி என்று பேசியது சட்டமன்ற குறிப்பில் பதிவாகியுள்ளது. இதற்கு கொத்தடிமை மந்திரியின் பதில் என்ன?
கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட குற்றச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் விசாரணையின்போது, கடந்த ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ஒப்புக்கொண்ட 12 குற்றச் சம்பவங்களில், ஒருசில வழக்குகளில் காயல் துறையினர் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதில், அவசர கதியில் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று சம்பந்தமே இல்லாத குற்றவாளிகளைக் கைது செய்து தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், போலி குற்றவாளிகள் மறுவிசாரணையில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன என்று இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியவர் எடப்பாடியார். விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில்கூட ஸ்டிக்கர் ஒட்ட, கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா ரகுபதி சார்? பொள்ளாச்சி வழக்கு விசாரணை ஆறு ஆண்டுகள் நீடித்தது என்று கூறும் கொத்தடிமை மந்திரி ரகுபதி அவர்களே இதில், நான்கு ஆண்டுகள் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதை மறந்து விட்டார்.
அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கு முதல், அரக்கோணம் பாலியல் வழக்கு வரை, திமுக அரசு எந்த லட்சத்தில், பெண்களுக்கு எதிரான வழக்குகளை கையாண்டு வருகிறது என்பதை நாடறியும். தெய்வச்செயல் போன்ற பாலியல் சுயவர்களையும், பல SIR களையும் காத்து நிற்பது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுதான்.
திமுக எப்படிப்பட்ட கேடுகெட்ட கட்சி என்பதற்கு ஆவுடையார்கோவில் பெண்ணின் அந்தரங்க போட்டோவைக் காட்டி மிரட்டிய திமுக காமுகனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஸ்டாலின் SIR அமைச்சரவையில், அமைச்சராக இருக்கும் ரகுபதி சாரே சாட்சி!
திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தில் சிறந்த ஆட்சியைத் தருகிறது என்று கோயபல்ஸ் பொய்யை அமிழ்த்தூயிட்டிருக்கும் முன்னாள் சட்ட மந்திரி அவர்களே;
தமிழகத்தின் சிறிய மாவட்டமான செங்கல்பட்டில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 717 பாலியல் வழக்குகள் நீதிக்காகக் காத்திருக்கின்றன. என்றும், இதில் மகளிர் காவல் நிலையங்களில் சுமார் 270 வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு முடிந்தும் தேக்கத்தில் உள்ளன என்றும்; மற்றும் பல வழக்குகள் பல்வேறு நிலைகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையிலும் உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆட்சியின் "திறமை" எங்கே, விடியா மாடல் அரசு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குபோல் குறைந்த காலத்தில் நீதி வாங்கித்தா தயாரா? இல்லாத சாரை யாரும் உருவாக்கவில்லை. FIR-ல் உள்ள "யார் அந்த SIR?" என்று தான் கேட்கிறோம். மாறாக, அந்த சாரைக் காப்பாற்றும் இழிபிறவிகளாக இருப்பது ஸ்டாலின் சார் தலைமையிலான திமுக சார்கள் தான். கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர் அண்ணன் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வலுவாக இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான், இந்த வழக்கில் இந்த நீதிகூட கிடைத்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
கொத்தடியை மந்திரி திரு. ரகுபதி அவர்களே, 2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராலிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து பாலியல் வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் செய்த அனைத்து SIR-களுக்கும் சட்டத்தின்முன் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று எச்சரிக்கிறேன்.