தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி- 404 இடைத்தரகர்கள் கைது
- தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை.
- முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தக்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைப்பது இல்லை. எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை. இதில் இடைத்தரகர்கள் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா என ரெயில்வே வணிகத் துறையோடு இணைந்து பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
கடந்த சில மாதங்களாக தட்கல் டிக்கெட் விற்பனையை ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட சில முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் தினமும் அதிகளவில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்று இருப்பது கண்டறியப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற முறைகேடு நடந்து இருந்தாலும் தெற்கு ரெயில்வே மூலமே இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்யும் போது பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து இறுதியாக பணம் செலுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த நடைமுறை முற்றுப்பெறும். இந்த நடைமுறைகளை மேற்கொள்ள 2, 3 நிமிடங்கள் ஆகிவிடும். ஆனால் புரோக்கர்கள் சட்டவிரோதமாக போலி சாப்ட்வேர் தயாரித்து முன்பதிவுக்கான நடைமுறைகள் எதுவும் இல்லாமல் நேரடியாக மிக எளிதாக டிக்கெட் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தி இதுவரையில் புக்கிங் செய்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
பெயர், வயது, செல்லும் இடம், தேதி போன்றவற்றை மட்டும் பதிவு செய்து பணத்தை செலுத்தும் இந்த சாப்ட்வேர் மூலம் விரைவாக முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட்டினை பெற முடியும் என்பதை ரெயில்வே அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்புள்ள 7506 டிக்கெட்டுக்கள் தெற்கு ரெயில்வேயில் மட்டும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் 404 இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது 391 வழக்குகள் பதிவு செய்து கைதாகியுள்ளனர்.
இந்த மோசடியில் ஐ.ஆர்.சி.டி.சி. முகவர்களும் சிக்கியுள்ளனர். 119 முகவர்கள் சாப்ட்வேர் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் ஐ.டி. முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல 2003 ஐ.ஆர்.சி.டி.சி. ஐ.டி.களும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதனையும் முடக்கி வைத்துள்ளனர். மொத்தமாக டிக்கெட் புக்கிங் செய்வதிலும், தக்கல் முன்பதிவிலும் இந்த முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.