உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியீடு
- கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
- 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த 3-ந்தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.