தமிழ்நாடு செய்திகள்

ஆட்சி மாற்றம் ஏற்படும்... தங்கம் விலை உச்சத்தை தொடும்... புதிய நோய் பரவும்... பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்

Published On 2025-04-15 08:10 IST   |   Update On 2025-04-15 08:10:00 IST
  • மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
  • உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும்.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2026 ஏப்ரல் 13-ந்தேதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை பின்னடையும். உலக அளவில் புதிய நோய் தாக்குதல் வரலாம்.

வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.

விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும். எல்லையில் பதற்றம் இருக்கும். உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்படுமா? மீனாட்சி அம்மன் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்

தமிழ் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று கோவில் ஸ்தானிக பட்டர் ஹாலஸ், வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், "விசுவாவசு வருடத்தில் விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தர்மகாரியங்கள், தவங்கள் நடைபெறும். அதிக மழை, வெயில், குளிர் மற்றும் தீ விபத்துகளும் ஏற்படும். புதிய வரிவிதிப்பின் மூலம் விலைவாசி உயரும். அதனால் நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் அணி மாற்றம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News