விசைத்தறியாளர்கள் பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
- அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
- விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
கோவை:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி விசைத்தறியாளர்கள் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சோமனூரில் போராட்டத்தில் ஈடுபட்டு விசைத்தறியாளர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர் தரையில் அமர்ந்து விசைத்தறியாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் உங்களுக்கு பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என கூறி தங்களது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் விசைத்தறியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
விசைத்தறியாளர்களின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.
எனவே விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போராட்டம் விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் உடனடி நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.