நீலகிரியில் கோடை சீசன் நிறைவு- 2 மாதங்களில் 6 லட்சம் பேர் வருகை
- இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது.
- இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் வெளியூர்-வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனாலும் கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான காலநிலையை அனுபவிப்பதற்காக மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசனை கொண்டாட ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.
மேலும் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காணவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதிவரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.
இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்தனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
கோடை சீசனை கொண்டாட அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் கோடைக்காலத்தில் நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்தாண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் கடந்தாண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் ஊட்டி வருவதற்கு இ-பாஸ் எடுத்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்தாண்டு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்தனர். இ-பாஸ் நடைமுறை மேலும் தொடருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இ-பாஸ் நடையாலும், கடந்த 26-ந்தேதி முதல் மழை பெய்த நிலையிலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கொண்டே வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்து உள்ளனர்.