தபால் நிலையங்களில் பதிவு தபால் 'திடீர்' நிறுத்தம்
- நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர்.
- பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும்.
நாகர்கோவில்:
தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர். செல்போன் வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் தபால் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது.
அதேநேரம் மக்கள் முக்கியமாக தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தது பதிவு தபால் முறைக்காக தான். முக்கிய தபால்களை இந்த முறையில் தான் அனுப்பி வந்தனர். இந்த வகை தபால்கள் பாதுகாப்பானது என்பதோடு அதற்கான ஒப்புதல் பதிவு கார்டு (அக்னாலட்ஜ்மென்ட் கார்டு) வைத்து அனுப்பும் போது தபாலை பெற்றுக் கொண்டவரின் கையொப்பத்துடன் பதிவு கார்டு தபால் அனுப்பியவருக்கு திரும்ப வரும்.
எனவே பதிவு தபால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்புக்கும், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் அனுப்புவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. திருமண மற்றும் சுப நிகழ்ச்சிக்கான அழைப்புகளையும் பதிவு தபாலில் பலர் அனுப்பி வந்தனர். இந்த முறைக்கான கட்டணமும் குறைவு என்பதால் பலரும் இந்த பதிவு தபால் முறையில் தங்களது முக்கிய ஆவணங்கள், புகார்கள் போன்றவற்றை அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தபால் துறை விரைவு தபால் முறையை அமல்படுத்தியது. இது பதிவு தபால் முறையை போன்றது என்றாலும், இந்த முறையில் தபால் அனுப்பினால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் பொருளின் எடைக்கு தகுந்தவாறும், அனுப்பப்படும் ஊருக்கு தகுந்தவாறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
உள்ளூருக்குள் விரைவு தபாலை அனுப்ப வேண்டும் என்றாலும் கட்டணங்கள் அதிகம் என்பதால், விரைவு தபால் முறையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அவர்கள் பதிவு தபால் முறையை தான் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் பதிவு தபால் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்தே இதனை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கையில் எடுத்தது.
ஆனால் அதற்கான முறையான உத்தரவை வழங்காமல் பரீட்சார்த்த முறையில் தகவல்களை மட்டும் வழங்கியது. இந்த சூழலில் தற்போது பதிவு தபால் முறையை நிறுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பதிவு தபால் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அரசின் இந்த முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் தபால் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பதிவு தபால்களை அனுப்பி வந்தனர். பதிவு தபாலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.26 ஆகும். ஆனால் தற்போது விரைவு தபால் முறையில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.41 ஆக உள்ளது. இது தபாலின் எடை மற்றும் அனுப்பும் தூரம் ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல் அதிகரிக்கிறது. சாதாரண தபாலுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
விரைவு தபால்கள் அனுப்புவதற்கு கட்டணம் அதிகம் என்பதால் இந்த முறையை மாற்றி, பதிவு தபால் முறையை மீண்டும் மத்திய அரசு கொண்டுவர வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசின் விரைவு தபால் முடிவு, தபால் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலாக அமையும் என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என பல தரப்பினருக்கும் பயனுள்ள பதிவு தபால் முறையை முடக்கியது தவறு. அதனை மீண்டும் கொண்டு வந்து மக்கள் நலனை காக்க வேண்டும் என மத்திய அரசை சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.