நெல்லை-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்- பயணிகள் அவதி
- குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும்.
- நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
நெல்லை:
குஜராத் மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வாரம் ஒருமுறை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். இந்நிலையில் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்த ரெயில் இன்று அதிகாலை மங்களூர் மற்றும் உடுப்பி இடையே வந்தபோது அந்த வழித்தடத்தில் தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த ரெயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியல் நிறுத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது. இதனால் நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற ரெயிலை இன்று காலை 8.30 மணி அளவில் எஞ்ஜின் பின்னோக்கி இழுத்துச் சென்றது. சுமார் 5 கிலோ மீட்டர் பின்னால் இழுக்கப்பட்டு அங்குள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று பாதையில் இயக்கப்படுமா? அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரெயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை எனவும் பயணிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.