'பீகார் வெற்றிக்கு SIRதான் காரணம்': நிதிஷ் போல இ.பி.எஸ். முதலமைச்சர் ஆவார்- திண்டுக்கல் சீனிவாசன்
- SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
SIR பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், "ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்" என்று தெரிவித்தார்.
சீமான் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "SIR பணிகளால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் குறையும். SIR நடைமுறையை எதிர்க்கக் கூடாது. இது வழக்கமாக நடைபெறுவதுதான். பீகார் வெற்றிக்கு காரணமே SIR தான். பீகார் தேர்தல் வெற்றி அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். நிதிஷ்குமாரைப் போல 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார்" என்று தெரிவித்தார்.