தமிழ்நாடு செய்திகள்

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர முதலமைச்சரை வலியுறுத்துவோம்- சண்முகம்

Published On 2025-08-05 13:15 IST   |   Update On 2025-08-05 13:15:00 IST
  • சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும்.
  • மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

மதுரை:

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதே ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தான். மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் சாதி ஆணவக்கொலைகள் குறித்து விவாதித்த பொழுது தற்போதுள்ள சட்டங்களை போதுமானது. புதிய சட்டங்கள் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்,

ஆனால், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்திற்கு தனி சட்டம் தேவை என்பதை தான் வலிறுத்துகிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வண்ணம் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளோம்" என கூறினார்.

Tags:    

Similar News