தமிழ்நாடு செய்திகள்

சமஸ்கிருதத்தை விட 22 மடங்கு குறைவாக தமிழுக்கு நிதி ஒதுக்கிய பா.ஜ.க. - செல்வப்பெருந்தகை கண்டனம்

Published On 2025-06-24 13:12 IST   |   Update On 2025-06-24 13:12:00 IST
  • இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை.
  • சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?

சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News