திருச்செந்தூரில் இன்று கடல் 100 அடி உள்வாங்கியது
- பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
- நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.