கோவை மேற்கு மண்டலத்தில் செல்வமகள் திட்டத்தில் ரூ.4,522 கோடி டெபாசிட்- அதிகாரிகள் தகவல்
- கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கோவை:
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி திட்டக்கணக்குக்கு 8.2 சதவீதம் வட்டி மற்றும் வருமான வரிச்சட்டப்பிரிவு 80 சி-யின்படி, ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதனால் செல்வமகள் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்தூர் திருப்பூர் ஆகிய அஞ்சல் கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வெள்ளிக்கிழமைதோறும் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க, கோட்டத்தின்கீழ் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கிளை அஞ்சலகங்கள் தவிர அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் திட்டக்கணக்கை தொடங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவை மேற்கு மண்டல தபால்துறைத்தலைவர் சரவணன் கூறுகையில், கோவை மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 8.1 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் மத்திய அரசிடம் ரூ.4522 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.