கார்த்திகை மாதம் கடும் குளிர்- பழனிக்கு வரும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி
- பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
- சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.
சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.