தமிழ்நாடு செய்திகள்

ரீல்ஸ் மோகம்..! ஆபத்தை உணராமல் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி நடனமாடிய இளம்பெண்- வைரலாகும் வீடியோ

Published On 2025-06-01 20:30 IST   |   Update On 2025-06-01 20:32:00 IST
  • ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.
  • இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய இளம் வயதினர் கைகளில் பெரும்பாலும் வைத்திருப்பது செல்போன் மட்டுமே. கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. செல்போன் நிச்சயம் இருக்கும். அதனை வைத்து தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தனர்.

நாளடைவில் இந்த மோகம் சமூக வலைதளத்தில் வெளியிட வைக்கும் அளவிற்கு சென்றது. இதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர். இதில் சில உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

கடல் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்று சீறி வரும் அலைகளுடன் வீடியோ எடுப்பது. ரெயில் மற்றும் பஸ்களில் தொங்கியபடி படம் எடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என அவர்களின் செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.

இது போன்று ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ரீல்ஸ் எடுப்பது தொடர்ந்தே வருகிறது.

இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி ஆடிச்செல்லும் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது தான் ரீல்ஸ் மோகம் தலைதூக்கி உள்ளது.

அவர், ஓடும் ரெயிலின் படிக்கட்டில் முதலில் இறங்கி நிற்கிறார். பின்னர் படியில் நின்று கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடுகிறார். பின்னர் திரும்பி நின்றபடி தொங்கிய நிலையில் செல்கிறார்.

கைகளை அசைத்த படியும், தலையை ஆட்டியபடியும் செல்லும் பெண், பல்வேறு முக பாவனைகளையும் காட்டிச் செல்கிறார். அதனை ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை பின் தொடர்வோர் கூட கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் தங்களை அதிகமானோர் பின் தொடர வேண்டும் என்ற ஆசையில் உயிருக்கு ஆபத்தான முறையில் நூதன புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து ரிலீஸ் அடிப்படையில் பதிவிட்டு வரும் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவதால், இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்க கூடாது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News