ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்- மல்லை சத்யா
- துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.
- நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ
நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு என கூறப்பட்டது.
கூட்டத்தில், துரை வைகோ பதவி விலகலை ஏற்க மதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், துரை வைகோ முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 40 பேர் பேசியுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறியதாவது:-
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான்.
நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்.
மதிமுகவில் கடைசி வரை வைககோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.