தமிழ்நாடு செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காட்சி.

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலி- 12 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2025-08-23 10:36 IST   |   Update On 2025-08-23 10:36:00 IST
  • ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
  • மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.

ராமேசுவரம்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்தி வந்தனர்.

இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 19-ந் தேதி மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயிலை மறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.

இதையடுத்து வழக்கம் போல் இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News