ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடங்கியது: 10-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
- மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.
கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ரெயில் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரம்-தாம்பரம் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் அதன் பின் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே இலங்கை சிறையில் உள்ள பாம்பன் நாட்டு படகை மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாம்பன் பகுதி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.