தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறந்திருக்கும்

Published On 2025-01-28 08:08 IST   |   Update On 2025-01-28 08:08:00 IST
  • தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது.
  • இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.

தை அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலையிலும் போலீஸ் சார்பிலும் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் தை அமாவாசையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ராமேசுவரம் கோவிலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News