தமிழ்நாடு செய்திகள்

அழைப்பு விடுத்த நீதிபதி - ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என தகவல்

Published On 2025-08-08 15:42 IST   |   Update On 2025-08-08 15:42:00 IST
  • அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
  • பாமக செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.

அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி வருவதாக கூறியுள்ள நிலையில் ராமதாஸ் வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக் குறைவால் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என நீதிபதியிடம் கடிதம் தரச் சொல்லி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு கூறியுள்ளார்

Tags:    

Similar News