எனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார் என எனக்குத் தெரியும்- ராமதாஸ் பரபரப்பு தகவல்
- தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
- கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு ஒட்டு கேட்பு கருவியை ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான். பா.ம.க.வில் கௌரவ தலைவராக ஜிகே.மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு யாராவது 'நான் தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
எனது இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார் என எனக்குத் தெரியும். விசாரணை பாதிக்கப்பட கூடாது என்பதால் அதனை பற்றி தெரிவிக்கவில்லை என்றார்.