தமிழ்நாடு செய்திகள்

அறிவித்து ஒரு வாரம் ஆகியும் ஜல்லி, எம்.சாண்ட் விலையை அரசு குறைக்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி

Published On 2025-05-02 12:19 IST   |   Update On 2025-05-02 12:19:00 IST
  • கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
  • கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை.

கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களை அமைச்சர் துரைமுருகன் கடந்த 27-ந்தேதி அழைத்துப் பேசினார். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 எனக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.

எனவே, அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News