தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு

Published On 2025-08-06 18:58 IST   |   Update On 2025-08-06 18:58:00 IST
  • ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
  • வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே பா.ம.க.வில் கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இரு தரப்பினரும் பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ம.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இது ராமதாஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னைத் தானே தலைவர் என்று சொல்லி செயல்படுகிறார் அன்புமணி. அவரின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டது. பொதுக்குழுவை கூட்டடுவதற்கு கட்சி நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது. ஆகவே மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளிசங்கர் தொடர்ந்த வழக்கு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

Similar News