தமிழ்நாடு செய்திகள்

தமிழ் தெரியாத கேட் கீப்பர்: NO இண்டர் லாக்கிங் சிஸ்டம் - பாதுகாப்பு குறைபாட்டில் இயங்கும் ரெயில்வே

Published On 2025-07-08 13:39 IST   |   Update On 2025-07-08 13:39:00 IST
  • ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
  • கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.

இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.

இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:

அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .

ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?

ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?

தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழ் தெரியாத கேட் கீப்பர்:

தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .

வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?

கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.

Tags:    

Similar News