தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை: படகுகள் கரையில் நிறுத்தம்

Published On 2025-10-23 11:31 IST   |   Update On 2025-10-23 11:31:00 IST
  • தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த இடங்களில் கரையில் கயிறு கட்டி படகுகளை நிறுத்தினர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இங்குள்ள மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து 370 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.

இதேபோல கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாப்பட்டினம் உள்பட கடற்கரை பகுதிகளில் சுமார் 1,300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இவர்கள் கடலில் குறிப்பிட்ட நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து வருவார்கள். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை மழை இருந்தது. அதன்பின் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் தடை அமலானது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த இடங்களில் கரையில் கயிறு கட்டி படகுகளை நிறுத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News