14 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்
- தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.
கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.