தமிழ்நாடு செய்திகள்

புதுமைப் பெண் திட்டம்: திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்திய தமிழ்நாடு அரசு

Published On 2025-06-24 11:31 IST   |   Update On 2025-06-24 11:31:00 IST
  • உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
  • திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம்.

இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்று இருந்தது.

இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.

திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News