தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை- சென்னையில் இருந்து ரெயில் மூலம் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

Published On 2025-01-13 11:32 IST   |   Update On 2025-01-13 11:32:00 IST
  • பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
  • பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செல்ல வசதியாக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

10-ந்தேதி தொடங்கி இன்று வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

இன்று அரசு வேலை நாளாக இருந்தாலும் மதசார்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று ஆர்.எச். விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர் சென்றனர். பொங்கலை கொண்டாட வும் சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த 3 நாட்களில் சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கோவை, திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கும் எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற நகரங்களுக்கும் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்களில் 3 நாட்களில் பொது பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணித்தனர்.

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் பல மணி நேரத்துக்கு முன்பாக காத்திருந்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளிலும் ஆங்காங்கே அமர்ந்து பயணம் செய்தனர்.

அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.

இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்னி பஸ்களில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சஙக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

இது தவிர கார்களிலும் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர். பஸ், ரெயில்களில் இட நெருக்கடியை பார்த்து 3 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை யொட்டி கடைசி நேர பயணம் மேற்கொள்பவர்கள் இன்று தொடங்கினர். இத னால் சென்னையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டம் குறைந்தது. சென்னையில் இருந்து இன்றுடன் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Tags:    

Similar News