தமிழ்நாடு செய்திகள்

'வணக்கம் சோழ மண்டலம்' - தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி

Published On 2025-07-27 14:56 IST   |   Update On 2025-07-27 16:01:00 IST
  • எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.
  • பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.

பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.

பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.

சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.

இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

* 'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்ற வாசகத்தை கூறி வணங்கி உரையை தொடங்குகிறேன்.

* எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.

* சிவபக்தி பாடல்களை கேட்டபோது எனக்கு உள்ளுக்குள்ளே பரவசமாக இருந்தது.

* இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.

* பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.

* 140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்.

* இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை கண்டபோது எனக்கு பெருமிதமாக இருந்தது.

* தமிழ் மொழியில் பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

* சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானில் கலந்து விடுகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* சிவனை வழிபடுபவன் அவரை போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Full View


Tags:    

Similar News