பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.