2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்- செல்வப்பெருந்தகை
- தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான 2026 தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கினர்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பாசிச சக்திகளை விரட்டுவதற்கும், பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பதற்கான முதல் தேர்தல் பிரகடனத்தை கோவையில் எடுத்திருக்கிறோம்.
தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
ஆதிகாலத்திலிருந்தே பா.ஜ.க.வின் செயல் அதுவாகத்தான் இருந்துள்ளது. முதலில் ரத யாத்திரை என தொடங்கினார். தற்போது முருகனைக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் இஸ்லாமிய கடவுளை வணங்கி கொண்டு தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கிறார்கள்.
அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடுத்தது போல, எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுப்போம் என்று கூறிய பிறகே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இந்தக் கூட்டணி பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க.வின் தலைவர், ஊழல் குற்றவாளியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்தார். அதற்கு அமித்ஷாவும் மோடியும் ஒன்றும் கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முருகன் என்பவர் நெருப்பைப் போன்றவர். சக்தி வாய்ந்த தமிழ் கடவுள். அவருடன் பாஜக தேர்தல் விளையாட்டு விளையாடினால், அவர் பா.ஜ.க.வை சூரசம்ஹாரம் செய்வார்.
2026-ம் ஆண்டு நடக்ககூடிய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சூரசம்ஹாரம் தான் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரகடனம்.
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கோவையில் தொடங்கியுள்ளோம்.
பா.ம.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாசிச பா.ஜ.க.வின் பக்கம் போகாமல் இருப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மாறி சென்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த பா.ம.க.வின் நிலைப்பாடு அடிபட்டுப் போகும்.
தலைமுறையை பாழாக்குவதற்கு பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள கடவுள்களை தொட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாட்டிற்கு 'முருகா' என்ற கோஷத்துடன் வந்துள்ளார்கள். முருகன் தமிழ் கடவுள், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எனவே, அவர்களை முருகர் சூரசம்ஹாரம் செய்வார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.