தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த காட்டு யானை- சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் தடை
- தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி:
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.
தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.
பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-
10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.
காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.
அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.
இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.