வாளையாறு சோதனைச்சாவடியில் ஆம்னி பஸ் டிரைவர்கள் போராட்டம்- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு நேற்று புறப்பட்டு சென்ற சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள் திடீரென சிறைபிடித்ததுடன், அந்த பஸ்களில் இருந்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர். மேலும் பல்வேறு காரணங்களை கூறி அந்த பஸ்களுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக சுமார் 30 ஆம்னி பஸ்கள் இன்று காலை வாளையாறு சோதனைச்சாவடிக்கு வந்தன.
பின்னர் அந்த பஸ்களின் டிரைவர்கள் வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு வாளையாறு சோதனைச்சாவடி முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்களில் வந்திருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நடுரோட்டில் தவிக்க நேரிட்டது.
இதற்கிடையே வாளையாறு சோதனை சாவடி முன்பாக ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரள அரசின் அதிகப்படியான வரிவிதிப்பை கண்டித்தும், ஆம்னி பஸ்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் ஆம்னி பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
வாளையாறு சோதனைச்சாவடியில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் போராட்டத்தால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.