தமிழ்நாடு செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் திருப்பூருக்கு கூட்டம் கூட்டமாக வரும் வடமாநில தொழிலாளர் குடும்பங்கள்

Published On 2025-07-01 15:01 IST   |   Update On 2025-07-01 15:01:00 IST
  • கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.
  • தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர்.

நல்லூர்:

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் எக்ஸ்பிரஸ், அதிவேகம், டபுள்டெக்கர், வந்தேபாரத், மெமு என சுமார் 84 ரெயில்கள் வந்து செல்கின்றன. ஒரு சில ரெயில்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் 'ஸ்டாப்பிங்' இல்லாததால் நிறுத்தப்படுவதில்லை. கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.

காலை வேளையில் திருப்பூருக்கு வேலைக்கு வரும் தினசரி பயணிகள் 'சீசன் டிக்கெட்' மூலம் பயணம் செய்கின்றனர். மாதாந்திர தொகை செலுத்தி இந்த 'சீசன் டிக்கெட்' பெறுகின்றனர். ரெயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் இந்த சீசன் டிக்கெட்டை காட்டி விடுகின்றனர். அதேபோல் சாதாரண பயண டிக்கெட்டையும் மற்ற பயணிகள் காட்டி பயணம் மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த பணிகளில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பிரச்சினைகள் அதிகம் எழுவதில்லை. டிக்கெட் இல்லாத பயணிகளிடம் 'அபராதம்' வாங்கி ரசீது கொடுத்து விடுகின்றனர்.

ஆனால், திருப்பூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில் பயணிகளால்தான் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பெரும் 'தலைவலி' ஏற்படுகிறது.

பெரும்பாலும் காலையில் திருப்பூருக்கு வரும் 'தன்பாத்' எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுக்காமல் திருப்பூர் வந்து சேர்கின்றனர். இவர்கள் கணவன், மனைவி, குழந்தைகள், அக்கா, தங்கை, அண்ணன், மச்சான், மாமன் என கூட்டு குடும்பமாக வீட்டு சாமான்களை மூட்டை கட்டி கும்பல் கும்பலாக வருவதாலும், இவர்களிடம் சரிவர பேச முடியாத அளவுக்கு மொழிப்பிரச்சினை இருப்பதாலும் திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.

இவர்களிடம் 'பயணச்சீட்டு எங்கே?' என்று கேட்டால், 'கியா சாப்.... மாலும் நஹி' என்று பான்பராக் காவிப்பற்கள் தெரிய சிரித்து மண்டையை சொறிந்து நெளிகின்றனர். குழந்தை, குட்டி என பெரும்பட்டாளத்துடன் வரும் இவர்கள் மீது 'அபராதம்' விதித்தால் பணம் இல்லையென்று 'கை'விரித்து பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விடுகின்றனர்.

ரெயில்வே போலீசாரும் இவர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். டிக்கெட் இல்லாத பயணம் என வழக்கு பதிவு செய்து ஸ்டேஷனில் உட்கார வைத்தால் அந்த 'பெரும்' கும்பலுக்கு டீ, காபி, டிபன் வாங்கிக்கொடுத்து கட்டுபடியாவதில்லை என்று 'பெருமூச்சு' விடுகின்றனர்.

தினமும் காலையில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத நிலையில், மேலும் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை களத்தில் இறக்கி 'ஒரு கை' பார்த்துவிடலாம் என 'ரவுண்டு' கட்டி பயண டிக்கெட்டுகளை ஆய்வு செய்தாலும் 'நஹி பையா' என்று பான்பராக் வாசத்துடன் பல்லைக்காட்டும் வடமாநிலத்தவர்களால் 'தெறித்து' ஓடுகின்றனர் திருப்பூர் டிக்கெட் பரிசோதகர்கள்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தினமும் காலையில் 'தன்பாத்' ரெயில் மூலம் எங்களுக்கு 'தலைவலி' ஆரம்பம் ஆகிவிடுகிறது. பகலில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களிலும் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருகின்றனர். எல்லா பயணிகளையும் குற்றம் சொல்ல முடியாது. நிறைய பேர் முறையான டிக்கெட் எடுத்து வருகின்றனர். ஆனால் வடமாநிலத்தில் உள்ள சாதாரண கிராமத்தில் இருந்து வரும் கல்வியறிவு இல்லாத பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து திருப்பூர் வருகின்றனர்.

இந்த பிரச்சினை சென்னை, ஈரோடு, கோவை போன்ற ஊர்களிலும் உள்ளது. தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர். ஆனால் முறையான டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. இதிலும் ஒரு சிலர், ஏசி., பெட்டிகளிலும் ஏறி அமர்ந்து கொண்டு அங்குள்ள முறையாக 'ரிசர்வ்' செய்த பயணிகளை 'இம்சை' படுத்தி அவர்கள் சீட்டை ஆக்கிரமிக்கும் அவலமும் நடக்கிறது. அதுபோன்ற சமயங்களில் 'ஆர்.பி.எப்.,' ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை வைத்து அவர்களை அகற்ற வேண்டியுள்ளது. திருப்பூரில் கும்பல் கும்பலாக வரும் வடமாநில பயணிகளிடம் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News