ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- புரசைவாக்கத்தில் கைது
- மயிலாடுதுறையில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களிலும், மயிலாடுதுறையில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மட்டும் 15 இடங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில் புரசைவாக்கம் கஸ்தூரி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் அல்பாசித் அமீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலை சேர்ந்தவராவார்.
சென்னையில் 8 மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றிக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது அம்பலமாகி உள்ளது.
கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் அல்பாசித்தை கைது செய்துள்ளனர்.