தொடர்மழையால் 140 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது.
- கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி, வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, தூவானம் அருவி, கம்பம் உத்தமபாளையம், கூடலூர், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் வீரபாண்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் மேல்மட்ட பாலங்களில் சாலையை ஒட்டி தண்ணீர் சென்றது. மேலும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்ததால் நீர்வரத்து ஓரளவு சீரானது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது. இதனால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வைகை ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 68.50 அடியை எட்டியதும் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
நீர்வரத்து 13081 கன அடியாக உள்ள நிலையில் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 5109 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11892 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு உபரியாக 9403 கன அடி நீர் திறக்கப்பட்டு வண்டி பெரியாறு சப்பாத்து உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 139.35 அடியாக உள்ளது. விரைவில் 140 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 6962 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக உள்ளது. 80.20 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. 69 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று வரை நீர்வரத்து சீராகாததால் 9-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, மேகமலை அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 4.6, வீரபாண்டி 4.2, சோத்துப்பாறை 2.6, வைகை அணை 2, போடி 7.4, உத்தமபாளையம் 6.2, கூடலூர் 41.4, பெரியாறு அணை 6.6, தேக்கடி 26.4, சண்முகா நதி 2.6 என மொத்தம் 114.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.