மெதுவாக நகரும் மோன்தா புயல்: திருவள்ளூரில் கொட்டும் கனமழை - சென்னையில் மழை இருக்கா?
- புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மேலும் முதலில் மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னத்தின் வேகம் தற்போது குறைந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கரை நோக்கி நகர்கிறது.
இதனிடையே மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மழைக்கான அறிகுறி இல்லாத நிலையில், திருவள்ளூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சில மணி நேரமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் நிச்சயமாக மழை பெய்யும். ஆனால் சென்னை நகரம் குறைந்தபட்சம் 100 மிமீ கனமழையைப் பெறுமா என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கான விடைக்காக நாம் இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.