தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும் - ராமதாஸ்

Published On 2025-08-17 16:40 IST   |   Update On 2025-08-17 16:40:00 IST
  • மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது.
  • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியது. குறிப்பாக கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல. சொந்தமாக கூடிய கூட்டம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.

10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன். ஆனாலும் பயனில்லை. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் சாதிவாரி மக்கள்தொகை நடத்தலாம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன.

மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் இருப்பதை நான் அறிவேன். பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் நல்ல கூட்டணி நிச்சயம் அமையும். அது இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். அதில் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News