வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்ப்பு
- வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்
- 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடவடிக்கைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு வழக்கில் நீதிபதியின் செயல்பாடு முறையற்றதாகவோ, தவறானதாகவோ இருப்பதாக ஒரு வழக்கறிஞர் கருதினால் அதை அவர் கடிதமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பலாம் என்ற நடைமுறையை பின்பற்றி மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்ற கேள்வி எழுந்திருப்பதை 8 மேனாள் நீதிபதிகள் ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும் ஒரு வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் எப்படி சமூக வலைத்தளங்களில் அதிமுக வழக்கறிஞர் ஒருவரால் பகிரப்பட்டது என்ற கேள்வியும், இக்கடிதத்தைகாரணமாக வைத்து கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியே அவ்வழக்கறிஞரை நீதிமன்றத்தில் சம்மன் செய்து விசாரிக்க முடியுமா என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.
நீதிமன்ற நடைமுறைகள் முறையற்றதாகவும் தவறானதாகவும் அமைந்து விடக்கூடாது என சமூக அக்கரை கொண்ட குடிமக்கள் கருதுவது நியாயமானதே" என்று பதிவிட்டுள்ளார்.